Map Graph

புதுப்பேட்டை (சென்னை)

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

புதுப்பேட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி. புதுப்பேட்டை என்றாலே, வாகன உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்குமிடம் என்று பரவலாகத் தெரிந்த இடம். புது உதிரிபாகங்கள் மற்றும் பழைய உதிரிபாகங்கள் கிடைக்குமிடம் என்றும், அனைத்துவிதமான வாகனங்களுக்கான விற்பனை இடம் என்றும் அறியப்படுகிறது. யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம்.. வாகனங்களை வாங்கிச் செல்லலாம். இதுதான் சென்னை, புதுப்பேட்டை பகுதியின் சிறப்பு. எங்கு நோக்கிலும் பழைய வாகன உதிரிபாகங்கள் மற்றும் வாகனங்களின் ஆதிக்கம் தான். அரதப் பழசான இருசக்கர வாகனங்கள் முதல் அல்ட்ரா மாடல் மோட்டார் சைக்கிள்கள் வரை புதுப்பேட்டையில் வாங்க முடியும். வாகனங்களுக்குத் தேவையான நட்டு போல்ட்டுகள் முதல் இதயம் போன்ற இன்ஜின் வரை இங்கு கிடைக்கும். காயல்பட்டினத்தைச் சேர்ந்த முசுலிம்கள், முதன் முதலாக புதுப்பேட்டைக்கு வந்து பழைய வாகன உதிரிபாகங்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் 'காயல்பட்டினத்தார் கடை' என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டது. இதுவே, காலப்போக்கில், 'காயலான் கடை' என்று மாறிவிட்டதாகக் கூறுகின்றனர் இங்குள்ள வியாபாரிகள். புதுப்பேட்டையில், 1978ஆம் ஆண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட காயலான் கடைகள், இன்று 3000-த்திற்கும் மேல் பல்கிப் பெருகியுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு கடையும் குறைந்தது, 3 அல்லது 4 பேர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. ஆக, நேரடியாக இத்தொழிலை நம்பி 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இது தவிர, மறைமுகமாக, கடைசல், டிங்கரிங், பெயின்டிங், சரக்கு ஏற்றுபவர்கள், போக்குவரத்து பணியில் ஈடுபடுபவர்கள் என, 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலால் பயன் பெறுகின்றனர். இங்குள்ள கடைகளின் மூலமாக ஒரு நாளுக்கு, 50 இலட்சம் ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது.இங்கு பழைய இருசக்கர வாகனங்கள் முதல் பழைய சொகுசு கார்கள் வரையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மட்டுமல்லாது, அவற்றிற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பது புதுப்பேட்டையின் தனிச் சிறப்பு. எனவே தான், தமிழகத்தில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து மோட்டார் வாகனங்களையும், உதிரி பாகங்களையும் குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர். இங்குள்ள ஒரு சில வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து கூட பழைய மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். இதிலிருந்து புதுப்பேட்டை எந்த அளவுக்கு பழமையான வாகனங்களின் இரும்புக் கோட்டையாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. புதுப்பேட்டையில் உள்ள வர்த்தகர்கள், மோட்டார் வாகன பராமரிப்புத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை, ஏல அடிப்படையில் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். இது மட்டுமல்லாமல், டாட்டா, இந்துஸ்தான் மோட்டார், ஹூண்டாய், ஃபோர்டு உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து கழிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களும் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர, வங்கிகள் நிதி நிறுவனங்களால் ஏலம் விடப்படும் மோட்டார் வாகனங்களையும் வாங்கி விற்பனை செய்கின்றனர். ஏலத்தில் எடுத்த வாகனங்களை, பழுது நீக்கி, பொலிவுறச் செய்து, ஒரு குறிப்பிட்ட தொகையை லாபமாக வைத்து விற்பனை செய்கின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான வாகனங்களின் விலையும், புதிய வாகன விலையுடன் ஒப்பிடும்போது, பாதிக்கும் குறைவாக இருக்கும்.

Read article